பக்கம் - 281 -
அடுத்து, தங்களது சமூகத்தினரைப் பார்த்து பின்வருமாறு கவிபாடி அவர்கள் போரில் ஆர்வத்துடனும் வெறியுடனும் ஈடுபடத் தூண்டினர்.
“நீங்கள் எதிரிகளைப் பிளந்து சென்று வெற்றி கண்டால்
பட்டுக் கம்பளம் விரித்து ஆரத் தழுவி உங்களை வரவேற்போம்.
போரில் புறமுதுகிட்டால் அன்பிலார் பிரிவதைப் போல்
காதலின்றி உங்களைப் பிரிந்து விடுவோம்.”
போரின் முதல் தீ பிழம்பு
இரு படைகளும் சமீபமாயின. சண்டையிட நேரம் நெருங்கியது. இணைவைப்பவர்களின் கொடியை ஏந்தியிருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா போரின் முதல் தீப்பிழம்பை மூட்டினான். தன்னுடன் நேருக்குநேர் மோத முஸ்லிம்களை அழைத்தவனாக படைக்கு முன் வந்தான். இவன் குறைஷிகளில் மிகப்பெரிய வீரனாக இருந்தான். முஸ்லிம்கள் இவனை ‘கபிஷுல் கதீபா’ (படையின் முரட்டுக் கடா) என்று அழைத்தனர். இவன் வீரம் மிகைத்தவன் என்பதால் முஸ்லிம்கள் இவனுக்கு முன் வரத்தயங்கினர். ஆனால், நபித்தோழர் ஜுபைர் (ரழி) சிங்கம் பாய்வது போல் ஓரே பாய்ச்சலாக இவன் மீது பாய்ந்து ஒட்டகத்தின் மீது அவனுடன் ஏறிக் கொண்டார்கள். அவனுடன் சண்டை செய்து அவனைப் பூமியில் தள்ளி வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
ஜுபைரின் வீரதீரத் தாக்குதலைப் பார்த்த நபியவர்கள் தக்பீர் முழங்க முஸ்லிம்கள் அனைவரும் தக்பீர் முழங்கினர். நபி (ஸல்) அவர்கள் ஜுபைரைப் புகழ்ந்து “ஒவ்வொரு நபிக்கும் ஒரு விசேஷமான தோழர் இருப்பார். எனது விசேஷத் தோழர் ஜுபைராவார்” என்று கூறினார்கள். (ஸீரத்துல் ஹல்பிய்யா)
கொடியை சுற்றிக் கடும் போர்
இதைத் தொடர்ந்து போரின் தீ இரு தரப்பிலும் கடுமையாக மூண்டு போர்க்களத்தின் பல பகுதிகளிலும் போர் வெடித்தது. குறிப்பாக, போரின் கடுமை இணைவைப்போரின் கொடியைச் சுற்றியே இருந்தது. கொடியைச் சுமந்திருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா கொலை செய்யப்பட்ட பின் அவனது சகோதரன் உஸ்மான் இப்னு அபூ தல்ஹா அக்கொடியைப் பிடித்து போர் செய்ய முன்வந்தான். பெருமையுடன் பின்வருமாறு ஒரு கவிதையைப் பாடினான்:
“கொடி பிடித்தோன் கடமையாவது
ஈட்டி குருதியால் நிறம் மாற வேண்டும்
அல்லது அது உடைய வேண்டும்.”
அவனுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்காமல் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவன் மீது பாய்ந்து, அவனது புஜத்தில் கடுமையாக வெட்டினார்கள். அந்த வெட்டு அவனது கையை அவனது உடலிலிருந்து தனியாக்கியதுடன், அவனது தொப்புள் வரை சென்றடைந்து அவனது குடல்கள் வெளியேறின. பின்பு மற்றொரு சகோதரன் அபூ ஸஅது இப்னு அபூ தல்ஹா கொடியைச் சுமந்தான். அவனை நோக்கி ஸஅது இப்னு அபூ வக்காஸ் (ரழி) அம்பெறிந்தார்கள். அந்த அம்பு அவனது தாடையின் கீழாகக் குத்திக் கிழித்து வெளியேறியது. இதனால் அவனது நாவு வெளியேறியது. அடுத்த வினாடியே அவனும் செத்து விழுந்தான்.