பக்கம் -35-

முதல் கட்டம் - புதிய சமூகம் அமைத்தல்


நபி (ஸல்) மதீனாவில் நஜ்ஜார் கிளையினரின் இல்லத்திற்கு ஹிஜ்ரி 1ல் ரபிய்யுல் அவ்வல் பிறை 12, வெள்ளிக்கிழமை, கி.பி. 622 செப்டம்பர் 27ல் வந்தார்கள். முதலாவதாக அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் இறங்கி “இன்ஷா அல்லாஹ்! இங்குதான் தங்குமிடம் அமையும்” என்று கூறிவிட்டு, பின்பு அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

அல்மஸ்ஜித் அந்நபவி

இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எடுத்துக் கொண்ட முதல் முயற்சி பள்ளி வாசல் ஒன்றை அமைப்பதாகும். இந்த பள்ளி வாசலைத்தான் ‘அல்மஸ்ஜித் அந்நபவி’ (நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல்) என்று சிறப்பாக சொல்லப்படும். தங்களது ஒட்டகம் முதன் முதலாக மண்டியிட்ட இடத்தையே நபி (ஸல்) அவர்கள் பள்ளி கட்டுவதற்காகத் தேர்வு செய்தார்கள். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கி, அப்பணியில் தாங்களும் பங்கெடுக்கும் முகமாக கல், மண் சுமந்தார்கள். வேலையை உற்சாகப்படுத்தும் வகையில்,

“இறைவா! மறுமை வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை.

அன்சாரிகள், முஹாஜிர்களுக்கு நீ மன்னிப்பளி!

இந்த சுமை கைபருடைய சுமையல்ல!

எங்கள் இறைவன் மீது ஆணையாக! இது நன்மை பயக்கக் கூடியது தூய்மையானது.”

என்று கவியாக படிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பணியின்போது ஆர்வமூட்டும் சொற்களைக் கூறி வந்தது தோழர்களுக்கு வேலையில் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. தோழர்களும் உற்சாகம் மிகுந்து,

நபி பணி செய்ய, நாம் அமர்ந்தால்

அது வழிகெட்ட செயலல்லவோ!

என்று கவிபாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் இணைவைப்போரின் கப்ருகள் (அடக்கஸ்தலங்கள்) சில இருந்தன. மற்றும் பல இடிந்த கட்டடங்களும், சில பேரீத்த மரங்களும், ‘கர்கத்’ என்ற மரங்களும் இருந்தன. நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க கப்ருகள் தோண்டி எடுக்கப்பட்டு, மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டன. இடிபாடுகள் அகற்றப்பட்டு தரை சமமாக்கப்பட்டது. மரங்கள் அனைத்தும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் கிப்லா” திசையில் வரிசையாக நட்டு வைக்கப்பட்டன. அப்போது கிப்லா பைத்துல் முகத்தஸை” நோக்கியிருந்தது. பள்ளியுடைய வாயிலின் இரு ஓரங்களும் கற்களால் ஆக்கப்பட்டன. அதனுடைய சுவர்கள் கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டன. பேரீத்த மரத்தின் கீற்றுகளால் முகடுகள் அமைக்கப்பட்டன. தூண்கள் பேரீத்த மரங்களால் செய்யப்பட்டன. தரையில் மணலை விரிப்பாக ஆக்கப்பட்டது. பள்ளிக்கு மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டன. பள்ளியின் நீளம் கிப்லாவிலிருந்து கடைசி வரை நூறு முழங்கள் ஆகும். பள்ளியின் இரண்டு புறங்களும் அதே அளவு அல்லது அதைவிட சற்று குறைவாக இருந்தன. பள்ளியின் அஸ்திவாரம் மூன்று முழத்தில் போடப்பட்டது.

பள்ளியின் ஒரு பக்கத்தில் கல்லாலும், மண்ணாலும் சில அறைகள் கட்டப்பட்டன. பேரீத்த மரங்களாலும், அதன் மட்டைகளாலும் அந்த அறைகளின் முகடுகள் அமைக்கப்பட்டன. இவை நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கென கட்டப்பட்ட அறைகள். இந்த அறைகள் கட்டி முடிக்கப்பட்டபின் நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் வீட்டிலிருந்து அந்த அறைகளுக்கு மாறிவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அந்த பள்ளிவாசல் தொழுகையை நிறைவேற்றுதற்கு உண்டான இடம் மட்டுமல்ல மாறாக, முஸ்லிம்கள் மார்க்கக் கல்வியையும், அதன் போதனைகளையும் கற்றுத் தேர்வதற்குரிய ஒரு பல்கலைக்கழகமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. சண்டையிட்டு பிளவு பட்டு விரோதம் கொண்டுள்ள பல கோத்திரத்தினர் தங்களது விரோதத்தையும், பகைமையையும் மறந்து அன்புடனும், நேசத்துடனும் ஒன்று சேர்ந்து பழக, தோழமை கொள்ள, நட்புக் கொள்வதற்கேற்ற சங்கமாகவும் அது விளங்கியது. முஸ்லிம்களின் அனைத்துக் காரியங்களையும் நிர்வகிப்பதற்குரிய, செயல்திட்டங்களை அமுல்படுத்துவதற்குரிய மையமாகவும் அது விளங்கியது. ஆலோசனை சபைகளை நடத்துவதற்குரிய மன்றமாகவும் அது விளங்கியது.

அது மட்டுமல்ல வீடு, சொத்து, குடும்பம், பிள்ளைகள் என்று யாரும் இல்லாத ஏழை நபித்தோழர்களில் பலருக்கு தங்கும் விடுதியாகவும் அப்பள்ளி இருந்தது.

ஹிஜ்ராவின் அந்த தொடக்க காலங்களில்தான் இன்று உலகெங்கும் ரீங்காரமிடும் உயர்ந்த, கண்ணியமிக்க அந்த ராகம் ‘அதான்’ (பாங்கு) மார்க்கமாக்கப்பட்டது. இந்த ஒலி உலகத்தின் மூலை, முடுக்குகளை உலுக்கியது. ஒவ்வொரு நாளும் ஐந்து முறை “லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வே உயர்ந்தவன், முஹம்மது ரஸூலுல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இவ்வுலகத்தில் உயர்ந்தது இல்லை” என்பதை பறைசாற்றுகிறது. இந்த அழைப்பு முறையை சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜைது இப்னு அப்து ரப்பி (ரழி) என்பவர் கனவில் பார்த்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கவே அதை நபி (ஸல்) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதே கனவைத்தான் உமர் இப்னு கத்தாஃப் (ரழி) அவர்களும் கண்டார்கள். இதன் முழுச் சத்திரம் ஹதீஸ் நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (ஸுனனுத் திர்மிதி)

சகோதரத்துவ ஒப்பந்தம்

ஒற்றுமை மற்றும் அன்பை பகிர்ந்துகொள்ளும் மையமாக விளங்கிய பள்ளியை கட்டி முடிக்கும் பணியுடன், வரலாற்றில் மிகவும் பிரசித்திபெற்ற ஆச்சரியமிக்க மற்றொரு பணியையும் நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்டார்கள். அதுதான் நாடு துறந்த முஸ்லிம்களையும், மதீனாவில் உள்ள அன்சாரிகளையும் சகோதரர்களாக ஆக்கும் பணி.

இதைப்பற்றி இப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் அனஸ் இப்னு மாலிக்கின் இல்லத்தில் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இடையில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சகோதரர்களாக ஆக்கப்பட்டவர்கள் மொத்தம் தொண்ணூறு நபர்கள். அதில் பாதி முஹாஜிர்களும், பாதி அன்சாரிகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர் மற்றவருடன் நட்புகொள்ள வேண்டும் அன்பு காட்ட வேண்டும் ஒருவர் மரணித்துவிட்டால் அவன் இரத்த உறவினர்களைவிட இவரே அவன் சொத்துகளுக்கு வாரிசாவார். ஆனால், பத்ர் போர் நடைபெற்றதற்குப் பின்பு

இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே ஒருவர் மற்றவருக்கு ஏற்றமானவர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:75)

என்ற வசனம் இறங்கியபின் உடன்பிறவா சகோதர சொத்துமை சட்டம் ரத்து செய்யப்பட்டு சகோதரத்துவ உடன்படிக்கை மட்டும் நிரந்தரமாக்கப்பட்டது.

சிலர், “நபி (ஸல்) இரண்டாவது முறையாக முஹாஜிர்களுக்கு மத்தியில் மட்டும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது, ஒரு முஹாஜிரை மற்றொரு முஹாஜிருக்கு சகோதரராக ஆக்கினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், முதலில் கூறப்பட்ட கருத்துதான் ஏற்றமானதாகும். ஏனெனில், முன்னரே முஹாஜிர்களுக்கிடையில் இஸ்லாமிய சகோதரத்துவம் இருந்தது. குலக் கோத்திர ஒற்றுமையிலும், மக்காவை சேர்ந்தவர்கள் என்பதிலும் சகோதரர்களாக இருந்ததால் அவர்களுக்கு மத்தியில் புதிய ஒரு சகோதரத்துவ உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், அன்சாரிகளுடனான முஹாஜிர்களின் நிலைமை அப்படியல்ல. அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்குமிடையில் இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக ஒரு சகோதரத்துவ உடன்படிக்கை அவசியமாயிருந்தது.” (ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அறிமுகப்படுத்திய சகோதரத்துவத்தின் அடிப்படை நோக்கம் என்னவெனில் அறியாமைக் கால இனவெறியை ஒழிக்க வேண்டும் நிறம், குலம், இனம் ஆகிய பாகுபாடுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட வேண்டும் இஸ்லாமை அடிப்படையாக வைத்தே நட்போ பகையோ ஏற்பட வேண்டும்.

இந்த சகோதரத்துவத்தில் விட்டுக்கொடுத்தல், அன்பு, ஒருவருக்கொருவர் ஆறுதலளித்தல், பிறருக்கு நன்மை புரிதல் என்ற உணர்வுகள் பின்னிப் பிணைந்திருந்தன.

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் நாடு துறந்து எங்களிடம் வந்தபோது அவர்களையும் ஸஅது இப்னு ரபீஆ (ரழி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்.” அப்போது அப்துர் ரஹ்மானிடம் ஸஅது இப்னு ரபீஆ கூறினார்:

அன்ஸாரிகளில் நான் வசதி வாய்ப்புள்ள பணக்காரன். என் செல்வங்களை இரண்டு பங்குகளாக்கி (தங்களுக்கு ஒரு பங்கை வழங்கி) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரில் யாரைப் பிடிக்குமோ (உமக்குப் பிடித்த) அப்பெண்ணை நான் மணவிலக்கு (தலாக்கு) தந்துவிடுகிறேன். அவர் ‘இத்தா’ காலத்தை முடித்துவிட்டால் நீங்கள் அப்பெண்ணை மணமுடித்துக் கொள்ளுங்கள். அதற்கு “அல்லாஹ் உங்களுக்கு நலமும் வளமும் வழங்கட்டும்! அது தங்கள் குடும்பத்திலும் பொருளிலும் ஏற்படட்டும்!! எனக்குத் தங்களது கடைத் தெரு எங்கே இருக்கின்றதென்று காட்டுங்கள். அது போதும்” என்று அப்துர் ரஹ்மான் (ரழி) கூறினார்கள். கைனுகாவினன் கடைத் தெரு அவருக்குக் காட்டப்படவே, அப்துர் ரஹ்மான் (ரழி) கடைத்தெருவுக்குச் சென்று வியாபாரம் செய்து கொஞ்சம் பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணையை இலாபமாகப் பெற்று வீடு திரும்பினார். மறுநாளும் அவ்வாறே தொடர்ந்து வியாபாரத்திற்குச் சென்று அல்லாஹ்வின் அருளை அதிகமதிகம் சம்பாதித்தார். பின்பு ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது அவர்மீது வாசனைப் பொருளின் அடையாளம் பட்டிருந்தது. அவரிடம் நபி (ஸல்) “என்ன மகிழ்ச்சியான செய்தி?” என விசாரித்தார்கள். அவர் “நான் நேற்று ஒரு அன்சாரிப் பெண்ணை திருமணம் செய்தேன்” என்றார். “எவ்வளவு மணக் கொடை (மஹர்) அளித்தீர்கள்” என்று நபி (ஸல்) கேட்க, “(கால் தீனார் பெறுமானமுள்ள) சிறு துண்டு தங்கம்” என அப்துர் ரஹ்மான் (ரழி) பதில் கூறினார். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களிடம் அன்ஸாரிகள் நமக்கும் நமது சகோதரர்(களான முஹாஜிர்)களுக்கும் (பலன் தரும்) பேரீத்த மரங்களை பங்கு பிரித்துக் கொடுங்கள் என்றனர். நபி (ஸல்) முடியாது என மறுத்து விட்டார்கள். அப்படியென்றால் எங்களுடன் அவர்கள் பாடுபடட்டும். வரும் பலாபலன்களில் நாம் அவர்களைக் கூட்டாகிக் கொள்வோம் என்று அன்ஸாரிகள் கோரினர். அதனை முஹாஜிர்கள் ஒத்துக்கொண்டனர். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிகள் முஹாஜிர்கள் மீது அன்சாரிகள் கொண்டிருந்த ஆழமான பிரியத்தையும், மனத்தூய்மையையும், தியாகத்தையும், விட்டுக்கொடுத்தலையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. முஹாஜிர்கள் தங்களது அன்சாரித் தோழர்கள் செய்த உபகாரத்தை எந்த அளவிற்கு மதித்தார்கள் என்பதையும், அந்த உபகாரத்திலிருந்து தங்களின் அவசியமான தேவைக்கு மட்டும் எடுத்து பயனடைந்தார்கள் என்பதையும் அவர்களிடமிருந்து அதை முழுமையாக அபகரித்துக் கொள்ளவில்லை என்பதையும், தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் சந்தித்த பல பிரச்சனைகளுக்கு நபி (ஸல்) அறிமுகப்படுத்திய இந்த சகோதரத்துவ உடன்படிக்கை மிக அறிவுப்பூர்வமான தீர்வாகவும், நுட்பமான அரசியல் நடவடிக்கையாகவும், இருந்தது.