பக்கம் -36-
இஸ்லாமிய நட்பு ஒப்பந்தம்
இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் இந்த சகோதரத்துவ உடன்படிக்கையை நபி (ஸல்) உறுதியாக
அமைத்தது போன்றே அவர்களுக்கு மத்தியில் அறியாமைக்கால மனக் கசப்புகளையும், குரோதங்களையும்
அகற்றும் இஸ்லாமிய நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின்
மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள். ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்
நிறுவினார்கள்.
நட்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள்
நபியாகிய முஹம்மது (ஸல்) சார்பாகக் குறைஷி இனத்தைச் சேர்ந்த மற்றும் மதீனாவைச் சேர்ந்த
இன்னும் இவர்களைப் பின்பற்றி இவர்களுடன் சேர்ந்து, இவர்களுக்குத் துணையாகப் போர் புரியும்
அனைத்து முஸ்லிம்கள், இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் எழுதிக் கொள்ளும் ஒப்பந்தம்:
1) முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர்.
2) குறைஷிகளில் ஹிஜ்ரா செய்தவர்கள் (முஹாஜிர்கள்) தங்களுக்குள் ‘தியத்“”தை கொடுத்துக்
கொள்ள வேண்டும். அவர்களில் கைது செய்யப்பட்டவருக்கு அவர்கள் அழகிய முறையில் ‘ஃபித்யா“”
கொடுத்து உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். அனைத்து இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும்
நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அன்சாரிகளில் உள்ள ஒவ்வொரு கிளையாரும் தங்களின் பழைய
நிலைமைக்கேற்ப தங்களுக்குள் ‘தியத்’ கொடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களில் உள்ள ஒவ்வொரு
வகுப்பினரும் தங்களின் கைதிகளை அழகிய முறையில் ‘ஃபித்யா’ கொடுத்து விடுவித்துக் கொள்ள
வேண்டும். அனைத்து முஸ்லிம்களுக்கு மத்தியில் நீதமாக நடந்துகொள்ள வேண்டும்.
3) பொதுவாக இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கு மத்தியில் சிரமத்தில் இருப்பவர்களுக்கு
‘ஃபித்யா’ அல்லது ‘தியத்’ விஷயத்தில் அழகிய முறையில் கொடுத்து உதவ வேண்டும்.
4) தங்களில் கிளர்ச்சி செய்பவர்கள், முஃமின்களுக்கு மத்தியில் அநியாயம் செய்பவர்கள்,
பாவமான காரியம் செய்பவர்கள், வரம்பு மீறுபவர்கள், விஷமத்தனம் செய்பவர்கள் இவர்களை இறையச்சம்
உள்ள முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஒன்றுகூடி எதிர்க்க வேண்டும்.
5) மேற்கூறப்பட்டவர்களில் (பொதுவாக முஸ்லிம்களில்) வழிதவறிய ஒருவர் தங்களைச் சார்ந்த
ஒருவரின் பிள்ளையாக இருப்பினும் சரியே! அவருக்கு எதிராக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய
வேண்டும்.
6) ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு காஃபிருக்காக மற்றொரு இறைநம்பிக்கையாளரை கொலை செய்யக்கூடாது.
அதாவது வாரிசில்லாத காஃபிர் கொலையுண்டதற்காக அந்த காஃபிருடைய முஸ்லிமான நண்பர், கொலையாளியான
முஸ்லிமைக் கொல்லக் கூடாது.
7) ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு காஃபிருக்கு உதவி செய்யக் கூடாது.
8) அல்லாஹ்வின் பொறுப்பு சமமான ஒன்றே. முஃமின்களில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவர் பிறருக்கு
கார்மானம் (பாதுகாப்பு) கொடுக்கலாம். தங்களில் ஒருவர் கொடுக்கும் கார்மானத்தை மற்ற
அனைத்து இறைநம்பிக்கையாளர்களும் நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கம் இழைக்கக்கூடாது.
9) யூதர்களில் யார் நம்மை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு உதவி செய்யப்படும். அவர்களுடன்
அழகிய முறையில் நடந்து கொள்ளப்படும். அவர் மீது எவ்வித அநியாயமும் இழைக்கப்படமாட்டாது.
அவருக்கு எதிராக பிறருக்கு உதவி செய்யக்கூடாது.
10) சமாதான உடன்படிக்கை செய்துகொள்வது முஃமின்கள் அனைவரின் உரிமையாகும். அல்லாஹ்வின்
பாதையில் போர் செய்யும்போது, நீதமின்றி ஓர் இறைநம்பிக்கையாளரை விட்டுவிட்டு அன்னியருடன்
சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளக்கூடாது.
11) இறைநம்பிக்கையாளர்களில் யாரொருவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும்போது தவறுதலாக
தங்களில் ஒருவரைக் கொன்று விடுவாரோ அவருக்கு அனைத்து இறை நம்பிக்கையாளர்களும் பாதுகாப்புக்
கொடுக்க வேண்டும்.
12) நமக்கு இணக்கமான எவரும் குறைஷிகளின் உயிர், பொருளுக்குக் கார்மானம் (பாதுகாப்பு)
கொடுக்க முடியாது. மேலும், ஓர் இறைநம்பிக்கையாளருக்கு எதிராக ஒரு இணைவைப்பவரை பாதுகாக்க
முடியாது.
13) ஒரு முஃமின் மற்றொரு முஃமினை குற்றமின்றி கொலை செய்து விட்டதற்கு தக்க ஆதாரமிருப்பின்
அவரையும் பழிக்குப்பழி கொலை செய்யப்படும். ஆனால். கொலை செய்யப்பட்டவன் உறவினர் மன்னித்துவிட்டால்
அவரை விடுவிக்கப்படும்.
14) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் கொலை செய்தவனுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும். கொலை
செய்தவனுக்கு எவ்வகையிலும் உதவி செய்யக் கூடாது.
15) இறைநம்பிக்கையாளர் ஒரு விஷமக்காரனுக்கு, கலகம் செய்பவனுக்கு உதவி செய்யக் கூடாது,
அவனுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது எவர் ஒருவர் ஒரு விஷமக்காரனுக்கு உதவி செய்கிறாரோ
அல்லது அடைக்கலம் கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டு.
அவருடைய கடமையான, உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
16) உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை அல்லாஹ்விடமும்
அவனது தூதரிடமும் இறுதித் தீர்ப்புக்காக விட்டுவிட வேண்டும். (இப்னு ஹிஷாம்)
ஆன்மீகப் புரட்சிகள்
இதுபோன்ற நுட்பமிக்க சட்டங்களால் நபி (ஸல்) புதிய சமூகத்தின் அஸ்திவாரங்களை உறுதியுடன்
நிறுவினார்கள். அந்த சமூகத்தின் வெளித்தோற்றம் அது கொண்டிருந்த ஆன்மீக சிறப்புகளின்
பிரதிபலிப்பாக இருந்தது. இந்த உயர்வான ஆன்மீக சிறப்புகளை அந்த மேன்மக்கள் நபி (ஸல்)
அவர்களின் தோழமையால் பெற்றிருந்தனர். மேலும், நபி (ஸல்) அவர்களும் அவ்வப்போது அவர்களுக்கு
மார்க்கச் சட்டங்களையும், சமூக உயர்வுக்கு வழிகாட்டும் நல்லொழுக்கங்களையும் போதித்து
வந்தார்கள். அவர்களின் உள்ளங்களை ஒவ்வொரு அசுத்தத்திலிருந்தும் தூய்மைப்படுத்தியதுடன்
உயர் பண்புகளைக் கடைபிடிக்கவும் அவர்களுக்கு ஆர்வமூட்டினார்கள். அன்பு, சகோதரத்துவம்,
கண்ணியம், இறைவணக்கம், கீழ்ப்படிதல் போன்ற நல்லொழுக்கப் பயிற்சியும் அளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சில ஒழுக்கப் பயிற்சிகளையும், போதனைகளையும் பின்வரும் வரிகளில்
நாம் பார்ப்போம்:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “இஸ்லாமில் சிறந்த அமல் எது?” என்று கேட்டதற்கு நபி (ஸல்)
அவர்கள் “உணவளிப்பது, தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் சொல்வது” என்று கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன்
நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். அவர்களது முகத்தை நன்கு உற்று நோக்கியபோது அது
பொய்யன் முகம் அல்ல என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்களின் பேச்சில்
முதலாவதாக பின்வரும் உபதேசங்களே இடம் பெற்றன. “மக்களே! ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள்
பரவலாக்குங்கள் உணவளியுங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள் இரவில் மக்கள் உறங்கும்போது
நீங்கள் எழுந்து தொழுங்கள் நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்.” (ஸுனனுத் திர்மிதி,
இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: யாருடைய தீங்குகளால் ஒருவன் அண்டை வீட்டார் நிம்மதியற்று போவாரோ
அவர் சுவனம் செல்லமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: எவன் நாவு, கையின் தீங்கிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப்
பெற்றார்களோ அவரே முஸ்லிமாவார். (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) கூறினார்கள்: தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை நீங்கள்
இறைநம்பிக்கையாளராக மாட்டீர்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் “அனைத்து முஃமின்களும் ஒரே மனிதரைப் போலாவர். அவன் கண்ணுக்கு
வலி என்றால் அவன் உறுப்புகள் அனைத்தும் வருந்துகின்றன. அவருக்கு தலைவலி ஏற்பட்டால்
அனைத்து உறுப்புகளும் அதனால் வேதனை அடைகின்றன.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) கூறினார்கள்: “ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு
கட்டடத்தைப் போன்றாவார். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கிறது.” (ஸஹீஹுல்
புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “பகைமை கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் புறக்கணிக்காதீர்கள்
சகோதரர்களாக, அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு
மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்.” (ஸஹீஹுல் புகாரி)
மேலும் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநியாயம்
செய்யக் கூடாது அவரை எதிரியிடம் ஒப்படைக்கக் கூடாது யாரொருவர் தனது சகோதரன் தேவையை
நிறைவேற்ற ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவன் தேவையை நிறைவேற்றுகிறான்! யார் ஒருவர் ஒரு முஸ்லிமின்
கஷ்டத்தை அகற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டங்களிலிருந்து ஒரு கஷ்டத்தை
அகற்றுகிறான். யார் ஒருவர் முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவருடையக் குறையை மறுமையில்
மறைத்துவிடுவான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: “பூமியிலுள்ளவர்களின் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன்
உங்கள் மீது கருணை காட்டுவான்.” (ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: “தனது அருகிலுள்ள அண்டைவீட்டார் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர்
முஃமினாக இருக்க மாட்டார்.” (பைஹகி)
மேலும் கூறினார்கள்: “இறைநம்பிக்கையாளரை ஏசுவது பெரும் பாவமாகும். அவரிடம் சண்டை செய்வது
இறைநிராகரிப்பாகும்.” (ஸஹீஹுல் புகாரி)
மேலும், “பாதையில் இடையூறு தருவதை அகற்றுவது தர்மம் என்றும், அதை இறை நம்பிக்கையின்
ஒரு பகுதி” என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: “தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது
போல!“(முஸ்னது அஹ்மது, ஸுனனுத் திர்மிதி, இப்னு மாஜா)
மேலும் கூறினார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு
ஆடை அணிவிப்பாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை பட்டாடைகளிலிருந்து ஓர் ஆடையை
அணிவிப்பான். எந்த ஒரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ
அவருக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தின் கனிகளிலிருந்து உணவளிப்பான். எந்த ஒரு முஸ்லிம்
தாகத்துடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு நீர் புகட்டுவாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில்
“முத்திரையிடப்பட்ட சுவன மது”வைக் குடிக்கக் கொடுப்பான்.” (ஸுனனுத் திர்மிதி)
மேலும் கூறினார்கள்: “ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு
உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நல்ல வார்த்தைகளை
பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல்
புகாரி)
பிறரிடம் கையேந்துவதிலிருந்தும், யாசகம் கேட்பதிலிருந்தும் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டுமென்று
ஒவ்வொருவருக்கும் ஆர்வமூட்டியதுடன் பொறுமையின் சிறப்புகள், போதுமென்ற மனப்பான்மையின்
சிறப்புகள் பற்றி தங்களின் தோழர்களுக்கு அறிவுரைக் கூறினார்கள். நிர்பந்தமின்றி யாசகம்
கேட்பவர் நாளை மறுமையில் எழுப்பப்படும்போது முகம் சிதைந்தவராக இருப்பார் என்றும் எச்சரித்தார்கள்.
(ஸுனன் அபூதாவூது, ஸுனனுத் திர்மிதி, ஸுனன் நஸாம், இப்னு மாஜா)
மேலும், அல்லாஹ்வை வணங்கி வழிப்படுவதில் கிடைக்கும் நன்மைகளையும், உயர்வுகளையும், சிறப்புகளையும்
தங்களின் தோழர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்கள். தங்களின் தோழர்களை அல்லாஹ்வின்
புறத்திலிருந்து இறங்கும் குர்ஆனுடன் எப்போதும் தொடர்புடையவர்களாக ஆக்கினார்கள். எந்நேரமும்
தங்களின் தோழர்களுக்கு அழைப்புப் பணியின் கடமைகளையும், தூதுத்துவத்தை எடுத்து வைக்கும்போது
ஏற்படும் சிரமங்களையும் தெளிவாக உணர்த்துவதற்காக அல்லாஹ்வின் அருள்மறையை அவர்களுக்கு
ஓதிக் காண்பிப்பர்கள். தோழர்களும் அனுதினமும் குர்ஆன் ஓதும்படிச் செய்தார்கள். மேலும்,
குர்ஆனை விளங்க வேண்டும் அதை புரிந்துகொள்ள வேண்டும் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும்
என்று தங்களது தோழர்களுக்கு வலியுறுத்தினார்கள்.
இவ்வாறே தங்கள் தோழர்களின் சிந்தனையைச் சீர்படுத்தி, அவர்களின் ஆற்றல்களை விழித்தெழச்
செய்து அவர்களின் ஆன்மீக நிலையை உயர்த்தி, உயர்ந்த பண்புகளை அவர்களிடம் வளரச் செய்தார்கள்.
இதன்மூலமே இறைத்தூதர்களுக்கு அடுத்தபடியாக மனித வரலாற்றில் ஒரு முழுமைத்துவம் அடைந்த
சமுதாயமாக நபித்தோழர்கள் விளங்கினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள்: யார் ஒருவர் பிறரின் வழிமுறையை பின்பற்ற
நாடுகிறாரோ அவர் இறந்துவிட்டவர்களின் (நபித்தோழர்களின்) வழிமுறையை பின்பற்றட்டும்.
ஏனெனில், உயிருடன் இருப்பவர் மீது குழப்பங்கள் ஏற்படுவதை அச்சமற்று இருக்க முடியாது.
இறந்துவிட்டவர்களில் நீங்கள் பின்பற்ற வேண்டியவர்கள் யாரெனில் முஹம்மது (ஸல்) அவர்களின்
தோழர்களாவர். அவர்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் மிக்க நல்லுள்ளம் கொண்டவர்கள்
மிக ஆழமான கல்வியறிவு பெற்றவர்கள் பகட்டை விரும்பாதவர்கள். அல்லாஹ் தனது நபியவர்களின்
தோழமைக்காகவும், தனது மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அவர்களைத் தேர்வு செய்தான்.
அவர்களது சிறப்பை அறிந்து கொள்ளுங்கள். அவர்களது வழியில் அவர்களை நீங்களும் பின்தொடருங்கள்.
அவர்களது நற்பண்புகளிலும், வாழ்க்கையிலும் உங்களுக்கு முடிந்ததை உறுதியாக பிடித்துக்
கொள்ளுங்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் சரியான நேர்வழியில் இருந்தார்கள். (ரஜீன்-மிஷ்காத்)
மேலும், மகத்தான வழிகாட்டியான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் உள்ளரங்கமான,
வெளிரங்கமான அனைத்து சிறப்புகளையும் பண்புகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் பெற்றுத்
திகழ்ந்தார்கள். அனைத்து உள்ளங்களும் அவர்களை நேசித்தன அவர்களுக்காக அர்ப்பணமாயின்
அவர்கள் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும் அதற்கு அவர்களின் தோழர்கள் முழுமையாகப் பணிந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல், நற்போதனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று நடந்தார்கள்.
இதன் மூலமாகவே வரலாறு காணாத, மிகச் சிறந்த, நேர்த்திமிக்க புதிய சமூகத்தை நபி (ஸல்)
மதீனாவில் அமைக்க முடிந்தது. மேலும், பல காலங்களாக வழிகேட்டிலும், அறியாமை என்ற இருள்களிலும்
சிக்கித் தவித்து, தீர்வு தெரியாமல் திகைத்திருந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களுக்கும்
நபி (ஸல்) அவர்கள் தீர்வு கண்டார்கள்.
இதுபோன்ற மிக உயர்ந்த உளப்பூர்வமான, உள்ளரங்கமான பயிற்சிகளின் மூலம் இந்த சமூகத்தின்
அனைத்து அடிப்படை அம்சங்களும் முழுமை பெற்றன. மேலும், இந்த சமூகம் காலத்தின் சவால்களைச்
சந்தித்து சாதனை கண்டது மட்டுமல்லாமல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.