உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.