(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது; இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
“(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.