உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.