அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.