(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.