(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.