நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.