(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.