பக்கம் - 341 -
ஹிஜ்ரி 5, ஷவ்வால் மாதம் சனிக்கிழமை இரவு குறைஷிகள் யூதர்களிடம் ஒரு செய்தி அனுப்பினர். அதாவது “நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும், ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்களும் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

குறைஷிகளின் இக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன் “இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு ஏற்பட்ட தண்டனை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும் வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாக சண்டையிட மாட்டோம்” என்று கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் கூறியவுடன் “நுஅய்ம் உங்களுக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்” என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

இதற்குப் பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி “நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களிடம் வாருங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்” என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஅய்ம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்” என்று தங்களுக்குள் கூறி விட்டு வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது. முடிவு என்னவாகுமோ என அவர்கள் பயந்தனர்.

முஸ்லிம்கள் அல்லாஹ்விடம்,

“அல்லாஹ்வே! எங்களுடைய அவயங்களை மறைத்திடு எங்களின் பயங்களை போக்கி அபயம் அளி” என்று வேண்டினர்.

அடுத்து நபி (ஸல்) அவர்களும்,

வேதத்தை இறக்கியவனே! விரைவாக கணக்கு தீர்ப்பவனே! இப்படையினரைத் தோற்கடிப்பாயாக! இவர்களை ஆட்டம் காணச் செய்வாயாக! என அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ் தனது தூதரின் வேண்டுதலையும் முஸ்லிம்களின் இறைஞ்சுதலையும் ஏற்றுக் கொண்டான். எதிரிகளின் அணிகளில் பிரிவினை ஏற்பட்டு அவர்கள் தங்களுக்குள் உதவி செய்வதைக் கைவிட்டனர். அத்துடன் அல்லாஹ் அவர்களை விரட்ட பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. அவர்களின் பாத்திரங்களை தலைகீழாகப் புரட்டியது. கூடாரத்தின் கயிறுகளை அறுத்தது. எதிரிகள் நிலை தடுமாறினர். அல்லாஹ் வானவர்களின் படையை இறக்கினான். அவர்கள் எதிரிகளின் உள்ளங்களில் பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி, அவர்களை நிலை குலைய வைத்தனர்.