பக்கம் -90-

முஃதா யுத்தம்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.

“முஃதா’ என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர். இங்கிருந்து பைத்துல் முகத்தஸ், இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது.

யுத்தத்திற்கான காரணம்

நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரழி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால், போகும் வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷுரஹ்பீல் இப்னு அம்ரு அல்கஸ்ஸானி என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டான்.

தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்க மாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக் கொடிய ஒன்றாக கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நபி (ஸல்) பெரும் கவலைக் குள்ளானார்கள். 3000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார் செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)

அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகம் இருந்ததில்லை.

படைத் தளபதிகள்

நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்” என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் அறிவுர

பின்பு நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரையாவது: நீங்கள் அல்ஹாரிஸ் இப்னு உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்காவிட்டால் அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி தேடி அவர்களுடன் போர் செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். மோசடி செய்யாதீர்கள், பதுக்காதீர்கள், குழந்தை, பெண், வயது முதிர்ந்தவர், சர்ச்சுகளில் இருக்கும் சன்னியாசிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள். பேரீத்த மரங்கள் மட்டுமல்ல, வேறு எந்த மரங்களையும் வெட்டாதீர்கள் கட்டடங்களை இடிக்காதீர்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது, ஸுனனத் திர்மிதி, இப்னு மாஜா)

படையை வழியனுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்

இஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழலானார். “மக்கள் ஏன் அழுகிறீர்?” என்று கேட்க, “எனக்கு உலகத்தின் மீதுள்ள ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும், நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான் கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:

அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)

அந்தப் பாலத்தை கடக்கும் போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத் தெரியவில்லையே!” என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். “அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!” என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:

மன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி
அல்லது இரத்தவெறி கொண்ட
ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்
ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்
நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.
என் மண்ணறையருகே நடப்போர்,
“அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே!
நேர்வழி பெற்றவரே!’ என்று சொல்ல வேண்டும்.

பின்பு நபியவர்களும் மக்களும் ‘ஸனியத்துல் விதா’ என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்

ஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு ‘மஆன்’ என்ற இடத்தை அடைந்தது. “பல்கா மாநிலத்தின் ‘மாப்’ என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா, பலிய் ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.

ஆலோசனை சபை

இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம் அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.

ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: “எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்.”

இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர்.

எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்படுகிறது

‘மஆன்’ என்ற இடத்தில் இரண்டு நாட்கள் கழித்த பின் முஸ்லிம்கள் எதிரிகளின் நாட்டை நோக்கிப் புறப்பட்டனர். இறுதியாக, பல்காவின் கிராமங்களில் ஒன்றான ‘மஷாஃப்’ என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. எதிரிகள் நெருங்கி வர முஸ்லிம்கள் சற்று பின்வாங்கி ‘முஃதா’ என்ற இடம் வந்து அங்கு தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர். அங்கிருந்து போருக்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள், படையின் வலப்பக்கத்திற்கு குத்பா இப்னு கதாதாவை தளபதியாகவும், இடப்பக்கத்திற்கு உபாதா இப்னு மாலிக்கை தளபதியாகவும் ஆக்கினர்.

யுத்தத்தின் ஆரம்பம்

‘முஃதா’ என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர். என்ன ஆச்சரியம்! உலகமே திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தது. ஆம்! ஈமானியப் புயல் வீச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆச்சரியங்கள் நடக்கும்.

நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம் எய்தினார்.

அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது ‘ஷக்ரா’ என்ற குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது. கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார். பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

அல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக சுவனத்தில் இரண்டு இறக்கைகளை வழங்கினான். அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம் சுற்றித் திரிகிறார்கள். இதனை முன்னிட்டே இவர்களுக்கு ‘ஜஅஃபர் அத்தய்யார்’ (பறக்கும் ஜஅஃபர்), ‘ஜஅஃபர் துல்ஜனாஹைன்’ (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபர்) என்றும் கூறப்படுகிறது.

இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “வெட்டப்பட்டுக் கிடந்த ஜஅஃபரை நான் பார்த்தேன். அவரது உடம்பில் ஈட்டி மற்றும் வாளின் 50 காயங்கள் இருக்கக் கண்டேன். அதில் எந்தக் காயமும் உடம்பின் பிற்பகுதியில் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி)

மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரழி) கூறியதாக வருவதாவது: “நானும் ‘முஃதா’ போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் உடலைத் தேடினோம். அப்போது கொல்லப்பட்டவர்களில் இருந்த அவர் உடலில் 90க்கும் மேற்பட்ட அம்பு மற்றும் ஈட்டிகளின் காயங்கள் இருந்தன.” மற்றொரு வழியாக வரும் இதே அறிவிப்பில் “அந்த அனைத்துக் காயங்களும் அவரது உடலின் முன்பகுதியில்தான் இருந்தன” என்று வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)

இவ்வளவு வீரமாக போர் புரிந்து இறுதியில் ஜஅஃபர் (ரழி) வீர மரணமடைந்த பின்னர் கொடியை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஏந்தினார். தனது குதிரையின் மீதிருந்து போர்க் களத்தை நோக்கி முன்னேறிய அவர் சிறிது தாமதிக்கலானார். அதற்குப் பின்,

“சத்தியமாக என் உயிரே! விருப்போ வெறுப்போ
போரில் நீ குதித்தே ஆக வேண்டும்!
மக்கள் போருக்கு ஆயத்தமாகி ஈட்டிகளை
ஏந்தி நிற்கும் போது சுவனத்தை நீ வெறுப்பவனாக
உன்னை நான் காணுவதேன்?”

இக்கவிதையை பாடிவிட்டு குதிரையிலிருந்து கீழிறங்கி, போர்க்களத்தை நோக்கி ஓடிய போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஓர் இறைச்சித் துண்டை கொண்டு வந்து, “இதன்மூலம் உங்களது முதுகிற்கு வலுசேர்த்துக் கொள்ளுங்கள் இந்நாட்களில் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டீர்” என்று கூறினார். அவரது கையிலிருந்த இறைச்சித் துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு மீதமுள்ளதை வீசி எறிந்து விட்டார். பின்பு தனது வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் குதித்தவர் இறுதிவரை போரிட்டு வீரமரணமடைந்தார்.