பக்கம் -91-

அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது

அப்துல்லாஹ் (ரழி) வீரமரணமடைந்து கீழே விழும் நேரத்தில் அஜ்லான் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அக்ரம் (ரழி) என்ற வீரர் கொடியை ஏந்திக் கொண்டு “முஸ்லிம்களே! உங்களில் ஒருவரை உடனே தலைவராகத் தேர்ந்தெடுங்கள்” என்று கூறினார். மக்கள் “நீர்தான் அவர்” என்று கூறினர். அதற்கவர் “அது என்னால் முடியாது” என்று கூறிவிட்டார். மக்கள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரழி) காஃபிர்களுக்கு எதிராகக் கடுமையானப் போரை நிகழ்த்தினார்.

காலித் (ரழி) கூறுகிறார்: “முஃதா போரின் போது எனது கையால் ஒன்பது வாட்கள் உடைந்தன. யமன் நாட்டில் செய்யப்பட்ட ஒரு பட்டை வாள் மட்டும் எனது கையில் நிலைத்திருந்தது. (ஸஹீஹுல் புகாரி)

முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி)

சண்டை ஓய்கிறது

முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.

எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.

சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

12 முஸ்லிம்கள் இப்போரில் வீரமரணம் அடைந்தனர். ரோமர்களில் எத்தனை நபர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் போரின் முழு விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.

யுத்தத்தின் தாக்கம்

எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச் சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர். 3000 பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் மோதுவதும், பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக அமைந்தது. எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். சுலைம், அஷ்ஜஃ, கத்ஃபான், துப்யான், ஃபஜாரா ஆகிய கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.

பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர் இருந்தது. முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர்களின் நிலைப்பாட்டை நபி (ஸல்) அவர்கள் இப்போர் வாயிலாக நன்கு விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில், இவர்களெல்லாம் ரோமர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போரில் முஸ்லிம்களைத் தாக்கினர். எனவே, ரோமர்களை விட்டு இவர்களைப் பிரித்து முஸ்லிம்களோடு இணக்கமாக்க வேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர்ப்பதற்கு இது போன்ற பெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார்கள்.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள். ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் ‘பலிய்’ கிளையினரைச் சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது: ‘குழாஆ’ கிளையினர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த ஒன்று திரள்கின்றனர் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் நபியவர்களுக்குத் தெரிய வர, அவர்களை எதிர்ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார்கள். ஒரு வேலை இரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர்கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.

அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய போது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒரு கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அபூபக்ர், உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர்ந்து கொண்டார்கள். தொழுகை நேரம் வந்த போது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ வைக்க நாடினார். “நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர் எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்” என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூ உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு ‘குழாஆ’ கோத்திரத்தினர் வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.

இறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக் கண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.

எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அனுப்பினார்கள்.

‘தாத்துஸ் ஸலாசில்’ என்பது ‘வாதில் குரா’ என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் ‘ஸல்சல்’ என்பதால் இப்படைக்கு பெயர் ‘தாத்துஸ் ஸலாசில்’ என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அபூகதாதா படைப் பிரிவு

கத்ஃபான் கிளையினர் ‘கழீரா’ என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ‘கழீரா’ என்பது நஜ்து மாநிலத்தில் ‘முஹாப்’ கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே, நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அபூ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற அபூகதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு வெளியே இருந்தனர். (தல்கீஹ்)