இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்,
அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.
“ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.” (அல்குர்ஆன்
2:197)
ஹஜ் ஒருமாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக்
கூறுகிறான். “ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்துநாட்கள்”
என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.(புகாரி)
எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே
இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான்
துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே
தங்கிக் கொள்ள வேண்டும்.
தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டியவுடன் மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப் செய்ய வேண்டும். இந்த தவாப் ‘தவாபுல் குதூம்’ என்று
கூறப்படுகிறது. ‘குதூம்’ என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன்
செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம் என்று கூறப்படுகிறது.
இந்த நாளில்தான் இதைச் செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் இந்த தவாஃப்க்குக் கிடையாது.
இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்யவேண்டும். ஹஜ்ஜுக்குரிய
மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால்
அப்போதே இந்த தவாஃபைச் செய்துவிட வேண்டும்.
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடும் வகையில் நடக்காமல்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி
அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள்
நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘தன்யீம்’ என்ற இடம். வடக்கே
பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ‘அளாஹ்’ என்ற இடம். கிழக்கே பதினாறு கிலோமீட்டர்
தொலைவிலுள்ள ‘ஜியிர்ரானா’ என்ற இடம். வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
‘வாதீ நக்லா’ என்ற இடம். மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘ஹுதைபியா’ எனும்
இடம் ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம்
எனும் புனிதமான இடங்களாகும்.
இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?
“நிச்சயமாக அல்லாஹ் மக்கா நகரை புனித பூமியாக்கியிருக்கிறான்.
மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய
எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், இங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லை”
என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளித்துக் கொள்வது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும்
தல்பியாவை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திக்
கொள்வார்கள். ‘தூதுவா’ என்ற இடத்தில் இரவில் தங்கிவிட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது,
பிறகு குளிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : நாபிவு நூல் : புகாரி
தவாஃப் அல்குதூம் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப
தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும்
நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ
இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது
புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள்
இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ, அபுதாவுத்)
கஃபாவின் ஒரு மூலையில் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப்
செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை
மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ
ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு
முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி
அந்தக் கல்லில் வாய்வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத்
தொட்டுவிட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு,
கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது
முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு, நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால்
அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த
கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத்,
இப்னுமாஜா
கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால்
நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள்.
(ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை
செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.
“நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான்
அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை
முத்தமிட்டுருக்க மாட்டேன்” என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது
கூறினார்கள்.
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ,
இப்னுமாஜா
ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு
பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில்
கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்.
ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும்
வகையில் தவாப் செய்வது அவசியம்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர்.
“ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு
பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர்.
மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீ, அபுதாவுத், நஸயீ