ஸபா, மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது
தவாபுல் குதூம் எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஸபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்த பிறகு ‘ஸபா’வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் ‘ஸபா’வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் “நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்” என்ற வசனத்தை ஓதினார்கள். “அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக” என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதிர், லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸா அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா” என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) ‘பதனுல் வாதீ’ என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

2:158   إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَاوَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.

ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது ‘ஸஃயு’ என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை. ஸபாவிலிருந்து மர்வாவுக்குச் செல்வது ஒரு தடவையாகக் கருதப்படுமா அல்லது மீண்டும் ஸபாவுக்குத் திரும்புவது தான் ஒரு தடவையாகக் கருதப்படுமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஹதீஸ்களை ஆராயும்போது ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதே சரியாகும்.

“நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

துவக்கிய இடத்துக்கே திரும்பிவருவது தான் ஒருதடவை என்றிருந்தால் கடைசிச் சுற்று ஸபாவில் தான் முடிவுறும், மர்வாவில் முடிவுறாது. மர்வாவில் முடிந்ததிலிருந்து, ஸபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வந்தால் இரண்டு தடவை என்றும் விளங்கலாம்.

முடியைக் கத்தரித்தல்
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்
ஸஃயு செய்தவுடன் ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்து கொள்ளவேண்டும்.

உம்ரா என்றால் என்ன?
‘உம்ரா’ என்றால் என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான இடம் இதுவாகும். நாம் இதுவரை கூறிய காரியங்களை நிறைவேற்றுவதே உம்ராவாகும். அதாவது இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாப் செய்து, இரண்டு ரக்அத்கள் தொழுது, ஸபா, மர்வாவுக்கிடையே ஏழுதடவை ஓடி, தலையை மழித்து அல்லது கத்தரித்து உம்ரா நிறைவுறுகிறது.

உம்ரா மட்டும் செய்பவர் இத்துடன் தனது இஹ்ராமைக் களைந்துவிடலாம். ஹஜ் என்பது இத்துடன் மேலும் சில காரியங்களை உள்ளடக்கியதாகும். உம்ராச் செய்வதற்கு குறிப்பான நாட்கள் என்று ஏதுமில்லை. எந்த மாதம் வேண்டுமானாலும் எந்த நாளில் வேண்டுமானாலும் உம்ராச் செய்யலாம்.

ஹஜ்ஜின் மூன்று வகைகளைக் கூறும்போது இதுபற்றி விரிவாகப் பார்ப்போம். ஹஜ் மட்டும் செய்பவராக இருந்தால் தொடர்ந்து மேலும் சில கிரியைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.

ஒருவர் துல்கஃதா மாதத்தின் துவக்கத்திலேயே மக்கா வந்து மேற்கூறிய காரியங்களை நிறைவேற்றி முடித்து விட்டாலும் துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள்வரை காத்திருக்க வேண்டும்.

மினாவுக்குச் செல்வது
துல்ஹஜ் மாதம் ஏழாம் நாள் லுஹருக்குப்பின் இமாம் குத்பா உரை நிகழ்த்த வேண்டும். தர்வியா (எட்டாம் நாள்) நாளுக்கு முதல் நாள் மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் செய்யவேண்டிய கிரியைகள் பற்றி விளக்கினார்கள். துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று ‘மினா’ எனுமிடத்துக்குச் செல்லவேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்.

தர்வியா நாளில் (எட்டாம் நாளில்) நபி (ஸல்) அவர்கள் எங்கே லுஹர் தொழுதார்கள்? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் “மினாவில்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல் அஸீஸ் பின் ரபீவு
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்


தர்வியா நாளின் லுஹர் தொழுகையையும், அரபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் மினாவில் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்

இங்கே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். மினாவில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வைத்தார்கள்.
அறிவிப்பவர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி) நூல் : புகாரி

‘அரபா’ வுக்குச் செல்வது
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கிவிட்டு ‘அரபா’வுக்குப் புறப்பட வேண்டும்.

நபி (ஸல்) சூரியன் உதயமாகும்வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
மினாவிலிந்து அரபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும் தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.

நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபி (ஸல்) அவர்களுடன் செல்லும்போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்?” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அபீபக்ர் நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

அரபா நாளில் நோன்பு நோற்பது
அரபா நாளில் (ஒன்பதாம் நாளில்) நோன்பு நோற்பது சுன்னத் என்றாலும் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது.

அரபாவில் தங்குவதன் அவசியம்
ஹஜ்ஜின் மிகமுக்கியமான கிரியை அரபாவில் தங்குவதுதான். சிறிதுநேரமேனும் அரபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.

“ஹஜ் என்பதே அரபா(வில் தங்குவது)தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா


அரபாவுக்கு ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் வந்துவிடுவது நபிவழி என்றாலும், மறுநாள் பஜ்ருக்கு முன்பாக வந்துவிட்டாலும் ஹஜ் கூடிவிடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

அரபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில்தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரபா மைதானத்தின் எந்த இடத்தில் வேண்டுமானலும் தங்கலாம். “அரபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபிமொழி
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

அரபாவில் செய்ய வேண்டியவை
“ஹஜ் என்பதே அரபாவில் தங்குவவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், அரபாவில் அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனிடம் அதிகமதிகம் துஆச் செய்ய வேண்டும்.

நான் அரபாவில் நபி(ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழந்துவிட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.
அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) நூல் : நஸயீ

அரபாவில் இமாம் லுஹரையும் அஸரையும் ஜம்வு செய்து தொழுவார். அதில் சேர்ந்து தொழவேண்டும். அதற்கு முன் நிகழ்த்தப்படும் குத்பாவை - உரையை செவிமடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அரபா நாளில் குத்பா உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்

முஸ்தலிபாவுக்குச் செல்வது
அரபா மைதானத்தில் சூரியன் மறையும் வரை தங்கிவிட்டு, சூரியன் மறைந்ததும் மஃரிப் தொழாமல் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும். முஸ்தலிபாவுக்குச் சென்றதும் மஃரிபையும் இஷாவையும் ஜம்வு செய்து தொழ வேண்டும். அங்கே சுப்ஹ் வரை தங்கிவிட்டு சுப்ஹ் தொழ வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறையும் வரை அரபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிபாவுக்கு வந்தார்கள். ஒரு பாங்கு, இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும் இஷாவையும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை படுத்து (உறங்கி)விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)

மீண்டும் மினாவுக்குச் செல்வது
முஸ்தலிபாவில் பஜ்ரைச் தொழுததும் ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்தை அடைந்து கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் அல்லாஹ்வைப் போற்றி புகழ வேண்டும். நன்கு வெளிச்சம் வரும் வரை அந்த இடத்திலேயே இருந்துவிட்டு சூரியன் உதயமாவதற்கு முன் ‘மினா’வை நோக்கிப் புறப்பட வேண்டும்.

(பஜ்ரு தொழுததும்) கஸ்வா எனும் தமது ஒட்டகத்தில் நபி (ஸல்) அவர்கள் ஏறி ‘மஷ்அருல் ஹராம்’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். (அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி) அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹ் கூறி அவனது ஏகத்துவத்தை நிலை நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும்வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன் உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (சுருக்கம்)

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும், பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்றுவிடலாம்.

ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிபாவிலிருந்து புறப்பட நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா