இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
(நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
“வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
(நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை; மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
“நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
“குஃப்ரின்” மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!
ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக; அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகல் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது; (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது.
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
“அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே, எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும்.
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.