(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது: