உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், “நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) “உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று; மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
இன்னும் நினைவு கூறுங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
இன்னும் ஃகாரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (அழித்தோம்); திடனாக, அவர்களிடம் மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்; எனினும், (அவற்றை நிராகரித்து) அவர்கள் பூமியில் பெருமையடித்து நின்றார்கள். ஆனால் அவர்கள் (அழிவிலிருந்து) தப்பித்தார்களில்லை.
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
“என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
“எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.