மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை; அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது இவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே! இவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவ மன்னிப்புக் கோரினாலும் - நிச்சயமாக அல்லாஹ் இவர்களை மன்னிக்க மாட்டான். ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.