மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
(நபியே!) “இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது; வேறு மனிதர்களுக்கு கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் சொல்வீராக.
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) “அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;” நீர் கூறுவீராக: “அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
“நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்.
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). “எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்” என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், “அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதி மொழி வாங்கப் படவில்லையா?” (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
பயபக்தியுள்ளவர்களிடம், “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “நன்மையையே (அருளினான்)” என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.
மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
இன்னும், இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது “பொய்யை இட்டுக் கட்டுகிறாரா; அல்லது இவருக்கு பைத்தியமா?” (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
“என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).