இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
“எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்.)
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது: அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை: புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது; இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னிருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.