அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.