ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவள் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.
இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது: “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.