(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்” (இதற்கு பதிலாக, “பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, “எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், “ஆம் (பெற்றுக் கொண்டோம்” என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், “அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!” என்று அறிவிப்பார்.
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
“அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது “ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!”) என்பதாகும்.
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.
அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாயிற்று.
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
(நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) குருடர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை; அன்றியும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.