கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட எந்தவொரு போரிலிருந்தும் பின்தங்கியதில்லை; தபூக் போரையும் பத்ருப் போரையும் தவிர. பத்ருப் போரைப் பொறுத்தவரை, அதில் கலந்து கொள்ளாத யாரும் பழிக்கப்படவில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (போரிடுவதற்காக அல்லாமல்) குறைஷிகளின் வர்த்தகக் கூட்டத்தை வழிமறிக்கவே புறப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்கும் இடையே முன்னரே திட்டமிடாமல் ஒரு சந்திப்பை (போரை) ஏற்படுத்திவிட்டான்.
நான் ‘அகபா’ இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது நாங்கள் இஸ்லாத்திற்காக (உறுதிமொழி) ஒப்பந்தம் செய்தோம். பத்ருப் போர் மக்களிடையே (அகபாவை விட) பிரபலம் என்றாலும், பத்ருப் போரில் நான் கலந்து கொள்வதை விட அகபாவில் கலந்துகொண்டதையே நான் அதிகம் விரும்புகிறேன்.
தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு நான் பின்தங்கிய என் கதை இதுதான்:
அந்தப் போரின் போது இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்கு முன் என்னிடம் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் (ஒட்டகங்கள்) இருந்ததில்லை; ஆனால் இப்போருக்காக இரண்டு வாகனங்களைச் சேகரித்து வைத்திருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பத்தில் இப்பயணத்தை மேற்கொண்டார்கள். இப்பயணம் வெகுதொலைவானதாகவும், பாலைவனத்தைக் கடக்க வேண்டியதாகவும் இருந்தது. மேலும், (ரோமர்கள் என்ற) பெரும் எதிரிப் படையைச் சந்திக்க வேண்டியிருந்ததால், முஸ்லிம்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, தாம் எங்கே செல்கிறோம் என்ற விவரத்தை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுடைய பெயர்களை எந்தப் பதிவேடும் உள்ளடக்கியிருக்கவில்லை.
கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனவே, ஒரு மனிதர் (போருக்கு வராமல்) மறைந்து கொள்ள நினைத்தால், அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி) வராத வரை, தான் வராமல் இருப்பது நபியவர்களுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொள்ள முடியும். கனிகள் பழுத்து, மரநிழல்கள் அடர்ந்திருந்த (சுகமான) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்போருக்குப் புறப்பட்டார்கள். எனக்கு அவற்றின் மீது அதிக விருப்பம் இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதற்காகக் காலையில் புறப்படுவேன்; ஆனால், எதையும் முடிக்காமல் திரும்பி வருவேன். "நான் விரும்பினால் எளிதாகத் தயாராகிவிடுவேன்" என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். இது இப்படியே நீடித்துக் கொண்டே இருந்தது. மக்களோ போருக்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஒரு காலையில் புறப்பட்டு விட்டனர். அப்போதும் நான் எனது சாதனங்களில் எதையும் தயார் செய்திருக்கவில்லை. "நான் ஓரிரு நாட்களில் தயாராகி விடுவேன்; பிறகு அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்" என்று கூறிக் கொண்டேன்.
அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகு, ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான் காலையில் சென்றேன்; ஆனால் எதையும் முடிக்காமலேயே திரும்பினேன். மறுநாளும் இப்படியே ஆனது. இது என்னிடம் நீடித்துக் கொண்டே இருந்தது. அதற்குள் படையினர் வேகமாகச் சென்று விட்டனர். நான் புறப்பட்டு அவர்களை அடைந்து விடலாமா என்று நினைத்தேன் - நான் அப்படிச் செய்திருக்கக் கூடாதா! - ஆனால், அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்களிடையே நடமாடியபோது, நயவஞ்சகத்தில் மூழ்கியவர் என்று கருதப்பட்டவர் அல்லது பலவீனத்தின் காரணமாக அல்லாஹ் யாரை மன்னித்துவிட்டானோ அத்தகையவரைத் தவிர (சரியான இறைநம்பிக்கை கொண்ட) யாரையும் (ஊரில்) பார்க்க முடியாதது எனக்குக் கவலையை ஏற்படுத்தியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போர்க்களத்தைச் சென்றடையும் வரை என்னை நினைவுகூரவில்லை. அங்கே மக்களிடையே அமர்ந்திருந்தபோது, "கஅப் பின் மாலிக் என்ன ஆனார்?" என்று கேட்டார்கள். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய ஆடையும், அவர் தனது தோற்றப்பொலிவை ரசிப்பதும் அவரைத் தடுத்துவிட்டன" என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், "நீ சொன்னது தவறு! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
அப்போது, கானல் நீரை ஊடுருவி வரும் வெண்ணிற ஆடை அணிந்த ஒருவரை நபி (ஸல்) கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூ கைஸமாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் அன்சாரியான அபூ கைஸமாவாகவே இருந்தார். அவர்தான் (முன்பொரு முறை) ஒரு ஸாஉ அளவு பேரீச்சம்பழத்தை தர்மம் செய்தபோது, நயவஞ்சகர்களால் கேலி செய்யப்பட்டவர்.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது என் கவலை அதிகமானது. பொய்யான காரணங்களைச் சொல்ல நான் நினைத்தேன். "நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன்?" என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக என் குடும்பத்திலுள்ள விவேகமான அனைவரிடமும் ஆலோசனை கேட்டேன்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) வந்துவிட்டார்கள்" என்று கூறப்பட்டபோது, பொய்யான எண்ணங்கள் என்னைவிட்டு அகன்றன. பொய்யைச் சொல்லிவிட்டு நபியவர்களிடமிருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பதை நான் உணர்ந்தேன். எனவே, உண்மையையே பேசுவது என்று நான் உறுதி கொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பினால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, மக்களுக்காக அமர்வது வழக்கம். அவ்வாறே செய்தார்கள். போருக்கு வராமல் பின்தங்கியவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களுக்கான (பொய்க்) காரணங்களைக் கூறி சத்தியம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்தனர். அவர்களுடைய வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள்; அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.
இறுதியில் நான் வந்தேன். நான் சலாம் சொன்னபோது, கோபத்திலிருப்பவர் புன்னகைப்பது போல் புன்னகைத்தார்கள். பிறகு, "அருகே வா!" என்றார்கள். நான் நடந்து சென்று அவர்கள் முன் அமர்ந்தேன். என்னிடம், "ஏன் நீர் பின்தங்கினீர்? நீர் உமது வாகனத்தை வாங்கியிருக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாங்கள் அல்லாத வேறொருவர் முன் நான் அமர்ந்திருந்தால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன்; (வாதிடும்) தர்க்கத் திறமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இன்று உங்களிடம் பொய்யான காரணத்தைச் சொல்லி உங்களைத் திருப்திப்படுத்தினாலும், விரைவில் அல்லாஹ் என் மீது உங்களைக் கோபப்படச் செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். நான் உங்களிடம் உண்மையைச் சொன்னால், அதில் நீங்கள் என் மீது கோபமடைவீர்கள்; இருப்பினும் அதில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு (தகுந்த) எந்தக் காரணமும் இருக்கவில்லை. நான் பின்தங்கியிருந்த அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உண்மை பேசினார். நீர் எழுந்து செல்லும்! உமது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திரும்" என்று கூறினார்கள். நான் எழுந்தேன். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் நீர் எந்தக் குற்றமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. பின்தங்கிய மற்றவர்கள் சொன்னது போல் ஏதாவது ஒரு காரணத்தை நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குத் தவறிவிட்டீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்காகப் பாவமன்னிப்புத் தேடியதே உமது பாவத்திற்குப் போதுமானதாக இருந்திருக்குமே!" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "நான் சொன்னது பொய் (எனக்குக் காரணம் இருந்தது)" என்று சொல்லச் சொல்லி அவர்கள் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். நான் அவர்களிடம், "என்னுடன் இது போன்று வேறு யாருக்கேனும் நடந்துள்ளதா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், இரண்டு பேர் நீர் சொன்னது போலவே சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டது போலவே அவர்களுக்கும் சொல்லப்பட்டது" என்றார்கள். "அவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அவர்கள், "முராரா பின் ரபீஆ அல்-ஆமிரி மற்றும் ஹிலால் பின் உமையா அல்-வாகிஃபி" என்று பதிலளித்தனர். பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயரை என்னிடம் அவர்கள் கூறினர்; அவ்விருவரிடமும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது. அவர்கள் இருவரின் பெயரையும் என்னிடம் சொன்னவுடன் நான் (எனது முடிவில்) உறுதியாகிவிட்டேன்.
போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில் எங்கள் மூவருடன் மட்டும் யாரும் பேசக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தார்கள். பூமி எனக்கு அந்நியமாகிவிட்டது போல் என் உள்ளத்தில் தோன்றியது. நான் அறிந்திருந்த பூமி இதுவல்ல (என்று நினைத்தேன்). இப்படியே ஐம்பது இரவுகள் கழிந்தன. என் இரு தோழர்களும் சோர்ந்து போய், அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். ஆனால் நான் மக்களில் மிகவும் இளையவனாகவும், திடகாத்திரமானவனாகவும் இருந்தேன். எனவே, நான் வெளியே சென்று தொழுகையில் கலந்து கொள்வேன்; கடைவீதிகளில் சுற்றி வருவேன்; ஆனால் யாரும் என்னுடன் பேச மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை முடித்து அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். "சலாமுக்கு பதிலளிக்க அவர்கள் உதட்டை அசைத்தார்களா இல்லையா?" என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு அவர்களுக்கு அருகிலேயே நின்று தொழுவேன்; அவர்களைக் கள்ளப் பார்வையாகப் பார்ப்பேன். நான் தொழுகையில் ஈடுபடும்போது அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்; நான் அவர்கள் பக்கம் திரும்பினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.
மக்களின் புறக்கணிப்பு நீண்டுகொண்டே சென்றபோது, (ஒரு நாள்) நான் என் தந்தையின் சகோதரர் மகனும், எனக்கு மிகவும் விருப்பமானவருமான அபூ கதாதா (ரலி) அவர்களுடைய தோட்டத்தின் மதிலில் ஏறி அவருக்கு சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எனக்கு சலாம் பதில் சொல்லவில்லை. நான் அவரிடம், "அபூ கதாதாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதை நீ அறிவாயா?" என்று கேட்டேன். அவர் மவுனமாக இருந்தார். மீண்டும் அவரிடம் அல்லாஹ்வைக் கொடுத்துக் கேட்டேன்; அவர் மவுனமாகவே இருந்தார். மீண்டும் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என்று கூறினார். எனது கண்கள் கலங்கின. மதிலில் ஏறித் திரும்பி விட்டேன்.
நான் மதீனாவின் கடைவீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மதீனாவில் உணவு தானியங்களை விற்பதற்காக வந்திருந்த ஷாம் தேசத்து உழவன் (நபத்) ஒருவன், "கஅப் பின் மாலிக்கை எனக்கு யார் காட்டுவார்?" என்று கேட்டான். மக்கள் என்னைச் சுட்டிக்காட்டினார்கள். அவன் என்னிடம் வந்து, (கிறித்தவ) கஸ்ஸான் மன்னன் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்தான். நான் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் அதைப் படித்தேன். அதில், "உமது தோழர் (முஹம்மத்) உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. இழிவுக்கும் உரிமை மறுப்புக்கும் உள்ளாகும் இடத்தில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம்; நீர் எங்களிடம் வந்துவிடும்; நாங்கள் உம்மை கண்ணியப்படுத்துவோம்" என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும், "இதுவும் ஒரு சோதனையே" என்று கூறி, அதை அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்.
ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கடந்த நிலையில் வஹீ (இறைச்செய்தி) வருவது தாமதமானது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதர் என்னிடம் வந்து, "நீர் உமது மனைவியை விட்டு விலகியிருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்" என்றார். "நான் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமா? அல்லது என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். "இல்லை, அவளைவிட்டு விலகியிரும்; அவளை நெருங்க வேண்டாம்" என்று அவர் கூறினார். என் இரு தோழர்களுக்கும் இது போன்றே சொல்லியனுப்பினார்கள். நான் என் மனைவியிடம், "அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கே இரு" என்று கூறினேன்.
ஹிலால் பின் உமையாவின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹிலால் பின் உமையா முதியவர்; அவருக்குப் பணிவிடை செய்பவர் யாருமில்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதை வெறுக்கிறீர்களா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை (வெறுக்கவில்லை), ஆனால் அவர் உம்மை நெருங்கக் கூடாது" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு எதிலும் நாட்டம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு இந்நிலை ஏற்பட்டது முதல் இன்று வரை அவர் அழுது கொண்டே இருக்கிறார்" என்று கூறினார்.
என் குடும்பத்தினர் சிலர் என்னிடம், "ஹிலால் பின் உமையாவின் மனைவிக்கு அவருக்குப் பணிவிடை செய்ய அனுமதியளித்தது போல், உங்கள் மனைவிக்கும் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கலாமே?" என்று கூறினர். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இது குறித்து அனுமதி கேட்க மாட்டேன். நான் ஒரு இளைஞன்; நான் அனுமதி கேட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டேன்.
அதன் பிறகு பத்து இரவுகள் கழிந்தன. எங்களுடன் மக்கள் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு ஐம்பது இரவுகள் நிறைவடைந்தன. ஐம்பதாவது நாள் காலையில் நான் ஃபஜ்ர் தொழுதுவிட்டு, எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் அமர்ந்திருந்தேன். அல்லாஹ் (எங்களைப் பற்றிக் குர்ஆனில்) குறிப்பிட்டுள்ள அந்த நிலையில் நான் இருந்தேன்; என் உயிர் எனக்குச் சுமையாகி, பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் எனக்குக் குறுகியதாக இருந்தது. அப்போது, 'சல்ஃ' மலை மீதேறி ஒருவர், "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி!" என்று உரத்த குரலில் அழைப்பதை நான் செவியுற்றேன். உடனே (நன்றிக்காக) சஜ்தாவில் விழுந்தேன்; துன்பம் நீங்கிவிட்டது என்பதை அறிந்து கொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் போது, அல்லாஹ் எங்கள் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லப் புறப்பட்டனர். என் இரு தோழர்களிடமும் நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். ஒருவர் என் பக்கம் குதிரையை விரட்டி வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மலையேறி) என்னை நோக்கி ஓடி வந்தார். குதிரையை விட அவருடைய குரல் வேகமாக என்னிடம் வந்து சேர்ந்தது.
யாருடைய குரலை நான் கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல வந்தபோது, என்னுடைய இரண்டு ஆடைகளையும் கழற்றி அவருக்குப் பரிசாக அளித்துவிட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்நாளில் அவ்விரண்டைத் தவிர எனக்கு வேறு ஆடை இருக்கவில்லை. எனவே, நான் இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, "அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்!" என்று கூறினார்கள்.
நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்; அவர்களைச் சுற்றி மக்கள் இருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து, எனக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹாஜிர்களில் அவரைத் தவிர வேறு யாரும் என்னிடம் எழுந்து வரவில்லை. தல்ஹாவின் இந்தச் செயலை கஅப் (ரலி) அவர்கள் மறக்கவே இல்லை.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்க, "உம்மை உம் தாய் பெற்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைத்த நாட்களில் இதுவே சிறந்த நாள் என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது தங்களிடமிருந்தா? அல்லது அல்லாஹ்விடமிருந்தா?" என்று கேட்டேன். "இல்லை, அல்லாஹ்விடமிருந்துதான்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டு போன்று பிரகாசிக்கும்; அதை நாங்கள் அறிவோம்.
நான் அவர்கள் முன் அமர்ந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! என் தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்காக என் செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தர்மமாக வழங்கி விடுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது செல்வத்தில் சிலவற்றை உமக்காக வைத்துக் கொள்ளும்; அதுவே உமக்கு நல்லது" என்றார்கள். நான், "கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் வைத்துக் கொள்கிறேன்" என்று கூறினேன்.
மேலும் நான், "அல்லாஹ்வின் தூதரே! உண்மையின் மூலமாகவே அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் உயிருடன் இருக்கும் வரை உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்பது என் தவ்பாவின் ஒரு பகுதியாகும்" என்று கூறினேன்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைச் சொன்னது முதல் இன்று வரை, என்னை விட உண்மையை அதிகமாகப் பேசியதற்காக அல்லாஹ் சோதித்த (வெற்றியளித்த) யாரையும் நான் முஸ்லிம்களில் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அதைச் சொன்னது முதல் இன்று வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை. எஞ்சிய காலத்திலும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்று ஆதரவு வைக்கிறேன்.
அப்போது அல்லாஹ் (கீழ்கண்ட) வசனங்களை அருளினான்:
[திருக்குர்ஆன் 9:117-118]
**“லகத் தாபல்லாஹு அலன் நபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸார் அல்லதீனத் தபஊஹு ஃபீ ஸாஅதில் உஸ்ரதி மின் பஅதி மா காத யஸீகு குலூபு ஃபரீகிம் மின்ஹும் ஸும்ம தாப அலைஹிம் இன்னஹு பிஹிம் ரஊஃபுர் ரஹீம். வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ ஹத்தா இதா தாகத் அலைஹிமுல் அருளு பிமா ரஹுபத் வ தாகத் அலைஹிம் அன்ஃபுஸுஹும்...”**
(பொருள்: "நிச்சயமாக அல்லாஹ் நபியையும், கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க அன்புடைவனாகவும், பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். மேலும், (போருக்குச் செல்லாமல்) பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (அல்லாஹ் மன்னித்தான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் அவர்களுக்குக் குறுகிவிட்டது; அவர்களுடைய உயிர்களும் அவர்களுக்குச் சுமையாகிவிட்டன... (இறுதியில்) 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள்' என்பது வரை (வசனம் அருளப்பட்டது).")
கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உண்மை பேசியதை விடப் பெரிய அருட்கொடை எதையும் என் வாழ்வில் நான் உணரவில்லை. நான் பொய் சொல்லியிருந்தால், பொய் சொன்னவர்கள் அழிந்தது போல் நானும் அழிந்திருப்பேன். ஏனெனில், பொய் சொன்னவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, யாருக்கும் சொல்லாத மிகக் கடுமையான வார்த்தைகளை வஹீ அருளப்பட்டபோது அல்லாஹ் கூறினான்:
[திருக்குர்ஆன் 9:95-96]
**“ஸயஹ்லிபூன பில்லாஹி லகும் இதின்கலப்தும் இலைஹிம் லிதுஃரிளூ அன்ஹும் ஃஅக்ரிளூ அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸுன் வ மஃவாஹும் ஜஹன்னமு ஜஸாஅன் பிமா கானூ யக்ஸிபூன். யஹ்லிபூன லகும் லிதர்ளவ் அன்ஹும் ஃஇன் தர்ளவ் அன்ஹும் ஃஇன்னல்லாஹ லா யர்ளா அனில் கவ்மில் ஃபாஸிகீன்.”**
(பொருள்: "நீங்கள் அவர்களிடம் திரும்பிச் சென்றால், அவர்களை நீங்கள் (கண்டிப்பதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக உங்கள் முன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணியுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் சம்பாதித்ததற்குக் கூலியாக அவர்கள் தங்குமிடம் நரகமேயாகும். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும், நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.")
கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடம் சத்தியத்தை ஏற்று, பைஅத் செய்து, அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடினார்களோ, அவர்களை விட்டும் எங்கள் மூவரின் விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தள்ளிப் போட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் **"வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ"** (மேலும் பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவர்) என்று கூறினான்.
இங்கே (குல்லிஃபூ - பின்தங்க வைக்கப்பட்டனர் என்று) அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது, நாங்கள் போரிலிருந்து பின்தங்கியதை அல்ல; மாறாக, எங்களுடைய விவகாரம் ஒத்திவைக்கப்பட்டதையே அது குறிக்கிறது. அதாவது, தங்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொன்னவர்களை ஏற்றுக்கொண்டு, எங்களை(த் தீர்ப்புக் கூறாமல்) பிற்படுத்தினானே, அதையே இது குறிக்கிறது.