அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு (அல்லாஹ்விடம் பரிந்துரை தேடும்படி) உள்ளுணர்வு ஊட்டப்படும் – அல்லது அவர்கள் கவலை கொள்வார்கள் (என்று அறிவிப்பாளர் சயீத் ஐயப்படுகிறார்). அவர்கள், ‘நம் இறைவனிடம் நமக்காகப் பரிந்துரை செய்யும்படி நாம் (யாரிடமாவது) கோரினால், அவர் நம்மை இந்த இடத்திலிருந்து (துன்பத்திலிலிருந்து) விடுவித்து இளைப்பாறுதல் அளிப்பாரே!’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதமாவீர்கள். அல்லாஹ் உங்களைத் தன் கரத்தால் படைத்தான்; தன் வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். ஆகவே உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அவன் எங்களை இந்த இடத்திலிருந்து விடுவித்து இளைப்பாறுதல் அளிக்கட்டும்’ என்று கூறுவார்கள்.
அதற்கு அவர்கள், ‘நான் அந்த இடத்திற்குரியவன் அல்லன்’ என்று கூறி, தாம் செய்த பாவத்தை நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அல்லாஹ் பூமியிலுள்ளோருக்கு அனுப்பிய முதல் தூதர் அவரேயாவார்’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரும், ‘நான் அந்த இடத்திற்குரியவன் அல்லன்’ என்று கூறி, தமக்கு (விவரம்) அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடம் வேண்டியதை நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் அருளாளனின் உற்ற தோழரான (கலீலுர் ரஹ்மான்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரும், ‘நான் அந்த இடத்திற்குரியவன் அல்லன்; நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் எத்தகைய அடியாரெனில், அல்லாஹ் அவரிடம் (நேரடியாகப்) பேசினான்; அவருக்குத் தவ்ராத் வேதத்தையும் வழங்கினான்’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரும், ‘நான் அந்த இடத்திற்குரியவன் அல்லன்’ என்று கூறி, (பழிக்குப் பழியாக இன்றி) நியாயமில்லாமல் ஓர் உயிரைக் கொன்றதை நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும், அல்லாஹ்வின் வார்த்தையும், அவனது ஆன்மாவும் (ரூஹ்) ஆவார்’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரும், ‘நான் அந்த இடத்திற்குரியவன் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். அவர் எத்தகைய அடியாரெனில், அல்லாஹ் அவரது முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான்’ என்று கூறுவார்கள்.
ஆகவே அவர்கள் என்னிடம் வருவார்கள். உடனே நான் (இறைவனிடம்) செல்வேன்.”
(ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “நான் இறைநம்பிக்கையாளர்களின் இரு அணிகளுக்கிடையே நடந்து செல்வேன்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது).
(மீண்டும் அனஸ் (ரழி) அவர்களின் அறிவிப்புத் தொடர்கிறது):
“பிறகு நான் என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கோருவேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும்போது ஸஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவைப்பான். பிறகு, ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! நீர் கூறும், செவிமடுக்கப்படும்; கேளும், தரப்படும்; பரிந்துரை செய்யும், ஏற்கப்படும்!’ என்று சொல்லப்படும்.
அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். எனக்கென ஓர் எல்லை நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன். பிறகு இரண்டாம் முறையாக நான் (இறைவனிடம்) மீள்வேன். என் இறைவனைக் காணும்போது ஸஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவைப்பான். பிறகு, ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! நீர் கூறும், செவிமடுக்கப்படும்; கேளும், தரப்படும்; பரிந்துரை செய்யும், ஏற்கப்படும்!’ என்று சொல்லப்படும்.
அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். எனக்கென ஓர் எல்லை நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன். பிறகு மூன்றாம் முறையாக நான் (இறைவனிடம்) மீள்வேன். என் இறைவனைக் காணும்போது ஸஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவைப்பான். பிறகு, ‘முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! நீர் கூறும், செவிமடுக்கப்படும்; கேளும், தரப்படும்; பரிந்துரை செய்யும், ஏற்கப்படும்!’ என்று சொல்லப்படும்.
அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். எனக்கென ஓர் எல்லை நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன். பிறகு நான்காம் முறையாக நான் (இறைவனிடம்) மீள்வேன். அப்போது நான், ‘என் இறைவா! குர்ஆன் தடுத்து வைத்வர்களைத் தவிர (நரகில்) வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூறுவேன்.”
கதாதா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அடுத்து அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாகக் கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லி, தன் உள்ளத்தில் ஒரு வாற்கோதுமை அளவு நன்மை இருந்தவர் நரகத்திலிருந்து வெளியேறுவார். மேலும், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லி, தன் உள்ளத்தில் ஒரு கோதுமை அளவு நன்மை இருந்தவர் நரகத்திலிருந்து வெளியேறுவார். மேலும், ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொல்லி, தன் உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருந்தவர் நரகத்திலிருந்து வெளியேறுவார்.”