அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “மேகங்கள் இல்லாதபோது சூரியனைப் பார்ப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். அவர்கள், “மேகங்கள் இல்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைப் பார்ப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக, அவ்வாறே மறுமை நாளில் நீங்கள் அவனைக் காண்பீர்கள்.
அல்லாஹ் மனிதர்களை ஒன்று திரட்டி, ‘யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றட்டும்’ என்று கூறுவான். எனவே, சூரியனை வணங்கியவர் சூரியனையும், சந்திரனை வணங்கியவர் சந்திரனையும், தாகூத்துகளை (பொய்யான தெய்வங்களை) வணங்கியவர் தாகூத்துகளையும் பின்தொடர்வார்கள். இந்த சமுதாயம் மட்டும் அப்படியே எஞ்சியிருக்கும்; அவர்களில் நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது அல்லாஹ், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் அவர்களிடம் வந்து, ‘நானே உங்கள் இறைவன்’ என்பான். அதற்கு அவர்கள், ‘உன்னிடமிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் நாங்கள் அவனை அடையாளம் கண்டுகொள்வோம்’ என்று கூறுவார்கள். பிறகு அல்லாஹ் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, ‘நானே உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று கூறி அவனைப் பின்தொடர்வார்கள்.
பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்.” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நானே அதை முதலில் கடப்பவனாக இருப்பேன். அந்நாளில் தூதர்களின் பிரார்த்தனை, ‘அல்லாஹும்ம ஸல்லிம், ஸல்லிம்’ (இறைவா! காப்பாற்றுவாயாக! காப்பாற்றுவாயாக!) என்பதாகவே இருக்கும். அதில் ‘சஃதான்’ முட்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும். நீங்கள் சஃதான் முட்களைப் பார்த்திருக்கிறீர்களா?” மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். அவர் கூறினார்: “நிச்சயமாக அவை சஃதான் முட்களைப் போலவே இருக்கும்; ஆயினும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியார். அவை மக்களின் செயல்களுக்கேற்ப அவர்களைப் பிடித்துக் கொள்ளும். அவர்களில் சிலர் தங்கள் (தீய) செயலால் நாசமாக்கப்படுவார்கள். சிலர் (முட்களால்) குதறப்பட்டுப் பின்னர் தப்பிவிடுவார்கள்.
இறுதியாக, அல்லாஹ் தன் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கி முடித்ததும், நரகவாசிகளில் தான் நாடியவர்களை - அதாவது 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சாட்சி சொன்னவர்களை - வெளியேற்ற விரும்புவான். அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்குக் கட்டளையிடுவான். வானவர்கள் அவர்களை ஸஜ்தாவின் அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்வார்கள். ஆதமின் மகனின் உடலில் ஸஜ்தாவின் அடையாளத்தை நரகம் தீண்டுவதை அல்லாஹ் தடுத்துள்ளான். எனவே, அவர்கள் கருகிய நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். பிறகு அவர்கள் மீது ‘மாஉல் ஹயாத்’ (வாழ்வின் நீர்) தெளிக்கப்படும். வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வண்டலில் பயிர் முளைப்பதைப் போன்று அவர்கள் முளைப்பார்கள் (புத்துயிர் பெறுவார்கள்).
கடைசியாக, நரகத்தை முன்னோக்கியவாறு ஒரு மனிதன் எஞ்சியிருப்பான். அவன், ‘என் இறைவா! இதன் காற்று என்னைக் கருகச் செய்துவிட்டது; இதன் ஜூவாலை என்னை எரித்துவிட்டது. எனவே நரகத்தை விட்டும் என் முகத்தைத் திருப்புவாயாக!’ என்று கூறுவான். அவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பான். அப்போது அல்லாஹ், ‘நான் உனக்கு இதைக் கொடுத்தால் நீ என்னிடம் வேறொன்றைக் கேட்பாயோ?’ என்று கேட்பான். அதற்கு அவன், ‘இல்லை; உன் கண்ணியத்தின் மீது ஆணையாக! நான் உன்னிடம் வேறு எதையும் கேட்கமாட்டேன்’ என்று கூறுவான். எனவே அல்லாஹ் அவனது முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவான்.
பிறகு அவன், ‘என் இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக!’ என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், ‘நீ என்னிடம் வேறு எதையும் கேட்கமாட்டேன் என்றுவாக்குறுதி அளிக்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான்; நீ எத்துணை மோசடி செய்பவன்!’ என்று கூறுவான். அவன் தொடர்ந்து பிரார்த்தனை செய்வான். அல்லாஹ், ‘நான் இதை உனக்குக் கொடுத்தால் நீ என்னிடம் வேறொன்றைக் கேட்பாயோ?’ என்பான். அதற்கு அவன், ‘இல்லை; உன் கண்ணியத்தின் மீது ஆணையாக! நான் உன்னிடம் வேறு எதையும் கேட்கமாட்டேன்’ என்று கூறி, அல்லாஹ்விடம் உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் அளிப்பான். எனவே அல்லாஹ் அவனைச் சொர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு வருவான்.
அவன் சொர்க்கத்தில் உள்ளவற்றைக் காணும்போது, அல்லாஹ் நாடிய வரை அவன் மவுனமாக இருப்பான். பிறகு, ‘என் இறைவா! என்னைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!’ என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ‘நீ என்னிடம் வேறு எதையும் கேட்கமாட்டேன் என்றுவாக்குறுதி அளிக்கவில்லையா? ஆதமின் மகனே! உனக்குக் கேடுதான்; நீ எத்துணை மோசடி செய்பவன்!’ என்று கூறுவான். அதற்கு அவன், ‘என் இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை மிகத் துர்பாக்கியவானாக ஆக்கிவிடாதே’ என்று கூறுவான். அல்லாஹ் சிரிக்கும் வரை அவன் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பான். அல்லாஹ் சிரித்ததும், அவனைச் சொர்க்கத்தில் நுழைய அனுமதிப்பான். அவன் உள்ளே நுழைந்ததும், ‘இதை விரும்பு, அதை விரும்பு’ என்று அவனுக்குக் கூறப்படும். அவனும் விரும்புவான். மேலும் ‘இதை விரும்பு’ என்று அவனுக்கு நினைவூட்டப்படும். அவனுடைய ஆசைகள் தீரும் வரை அவன் விரும்புவான். இறுதியில் அல்லாஹ், ‘இதுவும் உனக்குரியது; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குரியது’ என்று கூறுவான்.”
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அந்த மனிதரே சொர்க்கவாசிகளில் கடைசியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் ஆவார்.”